இன்று பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம்... அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகிறார்!
பிரதமர் மோடி இன்று இஸ்ரேல் செல்கிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பை ஏற்றுச் செல்லும் இந்தப் பயணம், பிரதமர் மோடியின் இரண்டாவது இஸ்ரேல் பயணமாகும் இதற்கு முன் 2017-ல் சென்றிருந்தார்.
பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றடைந்ததும், டெல் அவிவ் விமான நிலையத்தில் பிரதமர் நெதன்யாகு அவரை நேரில் வரவேற்கிறார். பின்னர் இருவரும் இணைந்து ஜெருசலேம் செல்கின்றனர். இஸ்ரேல் நாடாளுமன்றமான 'நெசெட்' அவையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்தியத் தலைவர் ஒருவர் அங்கு உரையாற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, இஸ்ரேல், கிரீஸ் மற்றும் சைப்ரஸ் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஒரு புதிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கூட்டணியை உருவாக்க நெதன்யாகு திட்டமிட்டுள்ளார். இதில் இந்தியாவின் பங்கு குறித்து விரிவாகப் பேசப்பட உள்ளது. 'ஏர் டிஃபென்ஸ்' அமைப்புகள் மற்றும் அதிநவீன ஆயுதத் தயாரிப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்துப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் சைபர் பாதுகாப்புத் துறைகளில் இஸ்ரேலின் ஒத்துழைப்பை இந்தியா நாடுகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள 'தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்' குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம். இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா இடையிலான பொருளாதார வழித்தடத்தை (IMEC) மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.

பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் காசா போர் நிறுத்தத்திற்குப் பிந்தைய சூழல் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவை "உலகளாவிய சக்தி" என்று நெதன்யாகு பாராட்டியுள்ளது, இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
