திருப்பரங்குன்றம் முருகனைத் தரிசித்தார் பிரதமர் மோடி - பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு!

 
திருப்பரங்குன்றம் மோடி

மதுரைக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று மாலை சாமி தரிசனம் செய்தார்.  மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் சுமார் ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்த பிறகு, பிரதமர் மோடி சாலை மார்க்கமாகத் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தடைந்தார். கோவிலுக்கு வந்த பிரதமரைத் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன், வேத மந்திரங்கள் முழங்கச் சிறப்பான முறையில் வரவேற்றனர்.

மூலவர் சுப்பிரமணிய சுவாமி மற்றும் கற்பக விநாயகர் சன்னதிகளில் பிரதமர் மோடி விசேஷப் பூஜைகள் செய்து வழிபட்டார். முருகப்பெருமானுக்கு நடைபெற்ற தீபாராதனையின் போது அவர் நீண்ட நேரம் கண்மூடிப் பிரார்த்தனை செய்தார். தரிசனம் முடிந்த பிறகு, கோவில் பட்டாச்சாரியார்கள் பிரதமருக்குப் பரிவட்டம் கட்டி, முருகப்பெருமானின் பிரசாதமான திருநீறு மற்றும் மாலைகளை வழங்கினர்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத் துறைக்கும் எதிராக நீதிமன்றத் தீர்ப்பு சமீபத்தில் வெளியானது. மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் எனத் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தச் சர்ச்சைக்குரிய சூழலில் பிரதமர் இந்தக் கோவிலுக்கு வருகை தந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

மோடி

பிரதமரின் வருகையையொட்டி திருப்பரங்குன்றம் கோவில் மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையினர்  கோவில் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இன்று காலை 11 மணிக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

தரிசனத்தை முடித்துக் கொண்டு பிரதமர் தற்போது மதுரை மண்டேலா நகரில் நடைபெறவுள்ள அதிமுக - பாஜக கூட்டணிப் பொதுக்கூட்டத்திற்குப் புறப்பட்டுள்ளார்.