நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

 
மோடி ஆலோசனை மோடி ஆலோசனை

புதுடெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களுடன் முக்கிய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

தற்போதைய சர்வதேசச் சூழலில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தொய்வு மற்றும் சவால்களை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

வளர்ச்சி ஜிடிபி இந்தியா முன்னேற்றம்

உலகப் பொருளாதாரத்தில் நிலவி வரும் மந்தநிலை மற்றும் வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தொய்வின்றி அடுத்தகட்டத்திற்கு எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்போது மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் மோதல் போக்குகளால் உலகளாவிய ரீதியிலும், குறிப்பாக இந்தியப் பொருளாதாரத்திலும் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்த விரிவான மதிப்பீட்டை ஆலோசனைக் குழுவினர் பிரதமரிடம் சமர்ப்பித்தனர்.

நாட்டின் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதற்கும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான கட்டமைப்பு மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொழில் செய்வதை மேலும் எளிதாக்குவது மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பொருளாதார மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.