இந்தியா திரும்பிய பிரதமர் மோடி - இன்று மாலை அவசரமாகக் கூடுகிறது மத்திய அமைச்சரவை!
ஐந்து வெளிநாடுகளுக்கான தனது அரசுமுறை சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று தாயகம் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இன்று மாலை டெல்லியில் மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் நாட்டின் பொருளாதார சூழல் குறித்து இக்கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 15 முதல் மே 20 வரை ஐக்கிய அரபு அமீரகம் (UAE), நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இத்தாலியில் அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் இருதரப்பு உறவை 'சிறப்பு உத்திப்பூர்வ கூட்டாண்மை' அளவுக்கு உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களை முடித்துக்கொண்டு, பிரதமர் மோடி இன்று காலை டெல்லி திரும்பினார்.

டெல்லி திரும்பிய சில மணி நேரங்களிலேயே, இன்று மாலை 5 மணியளவில் டெல்லியில் உள்ள சேவா தீர்த்தில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் முழுமையான கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மத்திய கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய மாநில அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்கள் என அனைவரும் பங்கேற்கின்றனர். இதற்காக அனைத்து அமைச்சர்களும் டெல்லியிலேயே தங்கியிருக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான போர் பதற்றம் மற்றும் அதன் காரணமாக இந்தியாவில் ஏற்பட வாய்ப்புள்ள பொருளாதார தாக்கங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

போர் சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்தியாவில் அண்மையில் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை நிலவரம் மற்றும் நாட்டின் ஆற்றல் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மோடி 3.0 அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள சூழலிலும், அண்மையில் அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ள பின்னணியிலும், மத்திய அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் (Cabinet Reshuffle) செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இது தவிர, மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கடந்த கால செயல்பாடுகள், மக்கள் நலத்திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்தும் இக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆய்வு செய்ய உள்ளார். இந்த அவசரக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
