கோயில் சொத்துக்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை... இந்து சமய அறநிலையத்துறையில் மாற்றம் - ஆளுநர் உரையில் அறிவிப்பு!
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கிய தமிழக சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடரின் தொடக்க அமர்வில், ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் ஆற்றிய உரையில் ஆன்மீகம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்ந்த தவெக அரசின் முக்கியக் கொள்கை முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள திருக்கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையிலும், கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கும் வகையிலும் இந்து சமய அறநிலையத்துறையில் முக்கிய உள்கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பல்லாயிரக்கணக்கான பழமைவாய்ந்த மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோயில்கள் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றன. இந்த கோயில் நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் இத்துறையின் தற்போதைய செயல்பாடுகளில் அமைப்பு ரீதியான மற்றும் அடிப்படை கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக ஆளுநர் தெரிவித்தார். கோயில் நிர்வாகத்தை மேலும் முறைப்படுத்தவும், நவீன தொழில்நுட்ப வசதிகளைப் புகுத்தவும் இந்த மாற்றங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதைத் தடுத்து, அவற்றை முழுமையாகப் மீட்பதில் புதிய அரசு தீவிரமாக உள்ளதாக ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான அனைத்துச் சொத்துக்களும், அவற்றின் மூலம் பெறப்படும் வருவாயும் முழுமையாக அந்தந்தக் கோயில்களின் வளர்ச்சி மற்றும் ஆன்மீக நலன்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது இந்த தவெக ஆட்சியில் மிக உறுதியாக நிலைநாட்டப்படும்."
அரசின் இந்த தீர்க்கமான கொள்கை அறிவிப்பின் மூலம், கோயில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டு, ஆன்மீகப் பணிகளுக்கு மட்டுமே அவை முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்ற புதிய உத்திரவாதம் கிடைத்துள்ளதால் ஆன்மீகப் பெரியோர்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பு எழுந்துள்ளது.
