கோவை சிறையிலிருந்து தப்பியோடிய கைதி - 4 காவலர்கள் சஸ்பெண்ட்... ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடுதல் வேட்டை!
கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து விசாரணைக் கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவத்தில், பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாகச் செயல்பட்ட 4 காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்து காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதியான ராகவன் என்பவர், கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி எதிர்பாராதவிதமாகத் தப்பியோடினார். கைதியை அழைத்துச் சென்ற பாதுகாப்புப் பணியில் அலட்சியமாகவும் கவனக்குறைவாகவும் செயல்பட்டதாகக் கூறி, பொறுப்பிலிருந்த 4 காவலர்களை அக்டோபர் 31-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்டக் காவல் துறை உத்தரவிட்டது.
தப்பியோடிய விசாரணைக் கைதி ராகவனைப் பிடிக்கச் சிறைத்துறையும் உள்ளூர் காவல்துறையும் இணைந்து தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

கோவை நகரின் முக்கியப் பாதைகள், சோதனைச் சாவடிகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ட்ரோன் கேமராக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கைதியைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தேனி சிறை உடைப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக சிறைத்துறை டி.ஜி.பி மாற்றப்பட்டுள்ள சூழலில், கோவையிலும் கைதி தப்பியோடிய சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
