தனியார் பேருந்து தடுப்புச் சுவரில் மோதி கோர விபத்து; 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய அப்பேருந்து, சாலையின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரின் மீது பயங்கரமாக மோதி நின்றது.

இப்பேருந்து விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்டோருக்குப் பலத்த மற்றும் லேசான காயங்கள் ஏற்பட்டன. விபத்து நடந்த உடனே சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். காயமடைந்த பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, பேருந்து ஓட்டுநரின் கடுமையான அலட்சியமும் கவனக்குறைவுமே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என பெண் பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். விபத்து குறித்துத் தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
