அதிகாலையிலேயே அதிர்ச்சி... நேருக்கு நேர் மோதிக்கொண்ட தனியார் பேருந்துகள்!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் வயலூரில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் இன்று காலை மோதிக் கொண்டதில் இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் உள்பட 20 பயணிகள் காயம்தஞ்சாவூரில் இருந்து தனியார் பேருந்து கும்பகோணத்தை நோக்கி வயலூர் சாலையில் சென்று கொண்டிருந்தது. எதிரே கும்பகோணத்தில் இருந்து தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது.

இரண்டு பேருந்துகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இரண்டு பேருந்துகளும் வயலூர் சாலையில் நிலை தடுமாறி நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இதில் 2 பேருந்து ஓட்டுநர் உள்பட 20 பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்த கிராம மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் அந்த சாலையில் 100க்கு மேற்பட்ட பேருந்து மற்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. மேலும், கும்பகோணத்தில் இருந்து வந்த பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாகவும், செல்போனில் பேசிக்கொண்டே வந்ததாகவும் அந்தப் பேருந்து பயணிகள் சத்தம் போட்டு உள்ளனர். ஆனால் அதைப் பற்றி கவலை படாமல் ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என பயணிகள் தெரிவித்தனர்.
