தனியார் மருத்துவமனை அறை வாடகை 3 ஸ்டார் ஓட்டல் கட்டணத்தை தாண்டக்கூடாது - நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை!

 
தனியார் மருத்துவமனை

தனியார் மருத்துவமனைகளில் அறைகளுக்கான கட்டணத்தைக் கட்டுப்படுத்தவும், கிராமப்புறங்களில் சுகாதாரக் கட்டமைப்புகளை உடனடியாக வலுப்படுத்தவும் வலியுறுத்தி நாடாளுமன்ற நிலைக்குழு முக்கிய அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

பெருநகரங்களில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளின் அறை வாடகை, 3 நட்சத்திர ஓட்டலின் அடிப்படை அறை கட்டணத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது. இந்த அடிப்படை அறை வாடகையுடன் மருத்துவர் கட்டணம், நர்சிங் கட்டணம், உணவு மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான கட்டணங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

சிக்கலான மற்றும் நீண்டகாலச் சிகிச்சைகளைத் தொடங்கும் முன்பே, அதற்கான முழுச் செலவு விவரங்களையும் நோயாளிகளுக்குக் கட்டாயம் வழங்க வேண்டும். சிகிச்சைக்கான செலவு, காப்பீட்டு வரம்பு மற்றும் நிதியுதவிகள் குறித்து நோயாளிகளின் குடும்பத்தினருக்கு விளக்க மருத்துவமனைகளில் தனி ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மருத்துவமனை

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளி ஒருவருக்குச் சராசரியாக ₹34,064 வரை குடும்பத்தினர் சொந்தப் பணத்தை செலவழிக்க நேரிடுவதாகவும், இதனால் இத்துறையில் ஆண்டுக்கு 10% - 13% வரை பணவீக்கம் உயர்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புற்றுநோய் போன்ற அதிக செலவு பிடிக்கும் சிகிச்சைகளுக்கு உதவ கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக நிதி பங்களிப்பு நிதியை ஒருங்கிணைத்துத் தனியாக 'தேசிய சுகாதார நிதியம்' உருவாக்கப்பட வேண்டும்.

பரிசோதனை, சிகிச்சை, மறுவாழ்வு மையம் என அனைத்து சேவைகளையும் உள்ளடக்கிய ஒற்றைக் கட்டணப் பொதியை நடைமுறைப்படுத்த வேண்டும்.