தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி... நாளை முதல் தனியார் பால் விலை மீண்டும் உயர்வு - லிட்டருக்கு ரூ.4 அதிகரிப்பு!

 
பால்

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் மீண்டும் பால் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதால், பால் வாங்கும் பொதுமக்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட உள்ளது.அதன்படி, செப்டம்பர் 26-ம் தேதி முதல் முக்கிய தனியார் பால் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பல்வேறு தனியார் பால் பிராண்டுகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை மாற்றத்தின்படி, 500 மி.லி. டோன்ட் பால் ரூ.32-க்கும், ஸ்டாண்டர்டைஸ்டு பால் ரூ.37-க்கும், ஃபுல் கிரீம் பால் ரூ.42-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. ஒரு லிட்டர் பாக்கெட்டுகளின் விலை முறையே ரூ.61, ரூ.70 மற்றும் ரூ.81 ஆக உயர்கிறது.இதேபோல், 500 கிராம் டோன்ட் தயிர் ரூ.41-ல் இருந்து ரூ.42 ஆகவும், டபுள் டோன்ட் தயிர் ரூ.36-ல் இருந்து ரூ.37 ஆகவும் விலை உயர்த்தப்படுகிறது.

பால்

இந்த ஆண்டில் தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்துவது இது 2-வது முறையாகும். முன்னதாக ஜூலை மாதத்திலும் பல தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியிருந்தன.

பால் கொள்முதல் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்த்தப்படுவதாக பால் விற்பனையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழக அரசின் ஆவின் பால் கொள்முதல் விலை செப்டம்பர் 1 முதல் உயர்த்தப்பட்டபோதிலும், அதன் சில்லறை விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.தனியார் பால் விலை உயர்வு காரணமாக தினசரி பால் பயன்படுத்தும் குடும்பங்களின் மாதாந்திர செலவு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.