அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை! தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
Oct 19, 2026, 15:52 IST
சென்னை: தமிழகத்தில் அரசு பொது விடுமுறை மற்றும் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தக்கூடாது எனத் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, நர்சரி, மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகையான தனியார் சுயநிதிப் பள்ளிகளுக்கும் இந்த அறிவுறுத்தல் பொருந்தும். விடுமுறை நாட்களில் நேரடியாகவோ, இணையவழியாகவோ சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தலை மீண்டும் வலியுறுத்தியுள்ள இயக்குநரகம், இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறி வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது
