ரோலக்ஸ் நிறுவனத்தின் சர்வதேசத் தூதராகப் பிரியங்கா சோப்ரா நியமனம்!

 
பிரியங்கா சோப்ரா பிரியங்கா சோப்ரா

சுவிட்சர்லாந்தின் உலகப் புகழ்பெற்ற ஆடம்பரக் கைக்கடிகாரத் தயாரிப்பு நிறுவனமான ரோலக்ஸ், தனது புதிய சர்வதேச பிராண்ட் தூதராகவும், 'டெஸ்டிமோனி'யாகவும் இந்தியப் பின்னணி கொண்ட உலகளாவிய நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா ஜோனஸை நியமித்துள்ளது.

சர்வதேச அளவில் கலை, கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், ரோலக்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

ரோலக்ஸ் நிறுவனம் தனது பிராண்டைப் பிரதிபலிக்கும் முகங்களாகத் தேர்ந்தெடுக்கும் மிகச் சில முக்கிய ஆளுமைகளை 'டெஸ்டிமோனி' என்று அழைக்கிறது. தங்களின் துறைகளில் உச்சம் தொட்ட, உலகிற்கு உத்வேகம் அளிக்கக்கூடிய தனித்துவமான திறமையாளர்களை மட்டுமே இந்த ஆடம்பர பிராண்ட் தங்களோடு இணைத்துக் கொள்ளும்.

ப்ரியங்கா சோப்ரா

2000-ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றது முதல் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என இரு பெரும் திரையுலகிலும் தடம் பதித்து,  வெற்றிகரமான தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் மிளிரும் பிரியங்கா சோப்ராவின் பன்முகத்தன்மையைப் பாராட்டும் விதமாக ரோலக்ஸ் இந்த கௌரவத்தை அளித்துள்ளது.

சொகுசு மற்றும் ஆடம்பர பிராண்டுகளின் உலகளாவிய விளம்பரத் தூதுவர் ஒப்பந்தங்களின் வரலாற்றில், பிரியங்காவின் இந்த புதிய கூட்டணி ஒரு முன்னோடியில்லாத நிகழ்வாகக் கருதப்படுகிறது.

பிரியங்கா சோப்ரா ஏற்கனவே கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் மற்றொரு முன்னணி ஆடம்பர பிராண்டான பல்கேரி நிறுவனத்தின் உலகளாவிய தூதராக இருந்து வருகிறார். பல்கேரி நிறுவனமும் கைக்கடிகாரங்களைத் தயாரிப்பதால் இதில் ஆரம்பத்தில் சில வணிகரீதியான தயக்கங்கள் இருந்தன. இருப்பினும், பல்கேரி மற்றும் ரோலக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுடனும் பிரியங்கா சோப்ரா நடத்திய சுமுகமான பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு புதிய ஒப்பந்தப் புரிதல் எட்டப்பட்டுள்ளது. அதன்படி, பல்கேரி நிறுவனத்தின் ஆடம்பர நகைகளுக்கான சர்வதேச முகமாகவும், ரோலக்ஸ் நிறுவனத்தின் ஆடம்பரக் கைக்கடிகாரங்களுக்கான சர்வதேச முகமாகவும் அவர் ஒரே நேரத்தில் செயல்பட உள்ளார்.

ஹைதராபாத் பிரியாணி பிரியங்கா சோப்ரா

ரோலக்ஸ் நிறுவனம் பிரியங்காவைத் தேர்ந்தெடுத்ததற்கு அவரது திரைத்துறை சாதனைகள் மட்டும் காரணமல்ல; கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக யுனிசெஃப் அமைப்பின் சர்வதேசத் தூதராக இருந்து, நலிவடைந்த குழந்தைகளின் கல்வி மற்றும் பெண் விடுதலைக்காக அவர் ஆற்றி வரும் சமூக நலப்பணிகளும், அவரது உலகளாவிய ஆளுமையும் இந்தத் தேர்வுக்கு முக்கியக் காரணியாகக் கூறப்பட்டுள்ளது.

பென்ட்லி மோட்டார்ஸ், பல்கேரி வரிசையில் ரோலக்ஸ் நிறுவனத்தின் சர்வதேச தூதராகவும் பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டிருப்பது, சர்வதேச சொகுசு ஆடை மற்றும் ஆபரணச் சந்தையில் இந்தியாவிற்கான முக்கியத்துவத்தை உலக அரங்கில் மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.