ரூ.2.69 கோடி பரிசுத்தொகை... சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்!
சென்னையில் சர்வதேச மகளிர் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி இன்று நவம்பர் 2ம் தேதி தொடங்குகிறது. நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. சர்வதேச டென்னிஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, வரும் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னையில் மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த WTA 250 சர்வதேசப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் 16 ஜோடிகளும் களமிறங்குகின்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் பங்கேற்பதால் டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தத் தொடரின் மொத்த பரிசுத்தொகை சுமார் ரூ.2.69 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு சுமார் ரூ.35.5 லட்சமும், இரட்டையர் பிரிவில் வெற்றி பெறும் ஜோடிக்கு சுமார் ரூ.13 லட்சமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

சர்வதேச அளவிலான மகளிர் டென்னிஸ் போட்டியை சென்னையிலேயே நேரில் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், விளையாட்டு ஆர்வலர்கள் இந்தத் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
