நீட் தேர்வு கட்டணம் திரும்பப் பெறுவதில் சிக்கல்... NTA இணையதளத்தில் விரைவில் புதிய லிங்க்!
வினாத்தாள் கசிவு காரணமாக நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தைத் திரும்ப வழங்கும் நடைமுறையில் திடீர் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்த காலக்கெடுவின்படி கட்டணத் திருப்புதல் பணிகள் தொடங்காததால், லட்சக்கணக்கான மருத்துவப் படிப்பு விண்ணப்பதாரர்களும் அவர்களின் பெற்றோர்களும் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ரத்து செய்யப்பட்ட நீட் தேர்விற்காக மாணவர்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணம் முழுவதும் மே 21 ஆம் தேதி முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாகத் திரும்பச் செலுத்தப்படும் எனத் தேசிய தேர்வு முகமை முன்பு அறிவித்திருந்தது. ஆனால், அறிவிக்கப்பட்ட தேதியில் இதற்கான ஆன்லைன் லிங்க் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் திறக்கப்படவில்லை. நாடு முழுவதும் பல லட்சம் மாணவர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை ஒரே நேரத்தில் சரிபார்த்துப் பணத்தைச் செலுத்த வேண்டியுள்ளதால், இந்தத் தொழில்நுட்பத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கான பிரத்யேகக் கட்டணத் திருப்புதல் லிங்க் இன்னும் ஓரிரு நாட்களில் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (nta.ac.in) நேரடிப் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவது?
இணையதளத்தில் இதற்கான லிங்க் திறக்கப்பட்டவுடன், மாணவர்கள் பின்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றித் தங்களின் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். மாணவர்கள் தங்களின் நீட் தேர்வு விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் அல்லது பிறந்த தேதியைப் பயன்படுத்தி இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டும்.
வங்கி விபரங்கள்: அதன் பின்னர், தங்களின் சரியான வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கியின் ஐஎஃப்எஸ்சி குறியீடு (IFSC Code) ஆகிய விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். (மாணவர்கள் தங்களின் பெற்றோர் அல்லது தங்களின் சொந்த வங்கிக் கணக்கு விபரங்களை மட்டுமே வழங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்).

யாருக்கு எவ்வளவு கட்டணம் திரும்பக் கிடைக்கும்?
மாணவர்கள் தங்களின் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள சாதிப் பிரிவின் அடிப்படையில், அவர்கள் செலுத்திய முழுத் தொகையும் திரும்ப வழங்கப்படும். பொதுப் பிரிவினர் ரூ.1700, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC-NCL / EWS):ரூ.1600, எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகள் (SC / ST / PwD / Third Gender): ரூ.1000
கட்டணத் திருப்புதல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் லிங்க் வெளியாகும் விபரங்களை அறிந்து கொள்ள மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
