மேட்டூர் அணை திறப்பில் சிக்கல்... டெல்டாவில் 5 லட்சம் ஏக்கர் சாகுபடி பாதிப்பு!
தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் மேட்டூர் அணை, போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் வழக்கமாக அணை திறக்கப்படும் நாளான இன்று திறக்கப்படவில்லை. தென்மேற்குப் பருவமழை தீவிரமடையாததும், அணைக்கான நீர்வரத்து மிகக் குறைவாக உள்ளதுமே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் டெல்டா பகுதிகளில் சுமார் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் குறுவை நெல் சாகுபடி இந்த ஆண்டு கடுமையான பாதிப்பைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். வழக்கமாக ஜூன் 12 ஆம் தேதி அணை திறக்கப்பட வேண்டும் என்றால், அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 90 அடிக்கு மேல் இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.56 அடியாக மட்டுமே உள்ளது. அணையின் ஒட்டுமொத்த நீர் இருப்பு 41.52 டிஎம்சிஆகக் குறைந்துள்ளதால், பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்துவிட முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதை நம்பி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் குறுவைச் சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவார்கள். நடப்பு ஆண்டில் அணை திறக்கப்படாததால், நாற்றங்கால் அமைக்கும் பணிகள் மற்றும் உழவுப் பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. நிலத்தடி நீரைப் பயன்படுத்தி ஆழ்துளைக் கிணறுகள் மூலம் ஒரு சில பகுதிகளில் விவசாயம் தொடங்கப்பட்டாலும், 5 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் நெல் சாகுபடி செய்ய முடியாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரியப் பங்கைத் திறந்துவிடக் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மறுபுறம், தென்மேற்குப் பருவமழை வழக்கமான காலத்தை விடத் தாமதமாகத் தொடங்கியுள்ளதால், காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு மற்றும் கேரளாவின் வயநாடு பகுதிகளில் இன்னும் பலத்த மழை பெய்யவில்லை.

இதன் காரணமாகக் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்தும் உபரி நீர் இன்னும் திறக்கப்படவில்லை. பருவமழை தீவிரமடைந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தால் மட்டுமே, ஜூன் மாத இறுதியிலாவது அணை திறக்கப்பட்டு டெல்டா விவசாயத்தைக் காப்பாற்ற முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
