பூட்டிய வீட்டில் பல்கலைக்கழக பெண் பேராசிரியை கொடூரக் கொலை!
கிழக்கு டெல்லி வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ள சத்யம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தேபோஸ்மிதா பால். இவர் டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் பெங்களூரில் வசித்து வரும் நிலையில், தேபோஸ்மிதா பால் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று காலை முதலே அவரது வீடு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது சகோதரி தேவரதி பாலுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் தனது சகோதரிக்குத் தொடர்ந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த தேவரதி பால் நேரில் வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, தேபோஸ்மிதா பால் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு உறைந்து போனார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், யாரோ மர்ம நபர்கள் பேராசிரியையின் தலையில் பலமாகத் தாக்கியதுடன் அவரது கை மணிக்கட்டு நரம்பையும் அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. வீட்டில் இருந்த நகைகளும் பணமும் அப்படியே இருப்பதால் இது கொள்ளைக்கான கொலை அல்ல என்பது உறுதியாகியுள்ளது. இந்த கொடூரக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
