பெண் பேராசிரியை விஷம் குடித்துப் பரிதாப பலி... கதறித் துடிக்கும் பெற்றோர்!
கேரளம் மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த அனில் குமார் என்பவரின் 28 வயது மகள் ஆதித்யா, அங்குள்ள ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் பண்ணியனூர் அருகே மனேக்கரா பகுதியைச் சேர்ந்த சரண் என்ற 28 வயது இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கிய இந்த ஜோடிகள், தொடர்ந்து தங்களது கைபேசி வழியாகப் பேசி நெருங்கிப் பழகி வந்தனர்.

இப்படியிருக்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேருந்து நிறுத்தத்தில் வைத்து ஆதித்யாவுக்கும் சரணுக்கும் இடையே திடீரெனக் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற சரண், அங்கிருந்த பொதுமக்கள் முன்னிலையிலேயே பெண் பேராசிரியை என்றும் பாராமல் ஆதித்யாவை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த அவமானத்தால் மனமுடைந்த ஆதித்யா, அவரிடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் வெடித்துள்ளது.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஆதித்யா, கடந்த 14-ந்தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவரை, குடும்பத்தினர் கண்ணூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், அவர் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக இறந்தார். இறப்பதற்கு முன்பாகத் தனது தாயிடம், ஆண் நண்பர் சரண் தன்னை அடித்து உதைத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்த விபரம் தற்பொழுது போலிசாரால் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
