அக்.20 முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு... சிவகங்கை மாவட்ட கலெக்டர் உத்தரவு!
சிவகங்கை மாவட்டத்தில் வரவிருக்கும் அக்டோபர் மாத இறுதியில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு தின நிகழ்ச்சிகள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழா ஆகியவை நடைபெற உள்ளதை முன்னிட்டு, பொது அமைதியைப் பேணவும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வருகிற அக்டோபர் 24-ம் தேதி அன்று மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு தின அரசு விழா மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, வருகிற 27-ம் தேதி காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு தின நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது.
மேலும், இதற்கடுத்து வரும் அக்டோபர் 30-ம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த விழாக்களில் கலந்துகொள்வதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அமைப்பினர் சிவகங்கை மாவட்டம் வழியாகப் பயணிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முக்கிய விழாக் காலங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகச் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, சிவகங்கை மாவட்டம் முழுவதும் வருகிற அக்டோபர் 20-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை பி.என்.எஸ்.எஸ். சட்டம் பிரிவு 163(1)-ன் கீழ் (பழைய சட்டப்பிரிவு 144) தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் மாவட்டத்திற்குள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
