ரூ.7,100 கோடி மதிப்பிலான திட்டங்கள்... இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி... திருப்பரங்குன்றத்தில் வழிபாடு!
இன்று இரவு தனிவிமானத்தில் சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று ராஜஸ்தான் மற்றும் குஜராத் பயணங்களை முடித்துக் கொண்டு, இரவு 9 மணியளவில் சென்னை வந்தடைகிறார்.
நாளை காலை காலை 11:45 மணியளவில் புதுச்சேரியில் ரூ.2,700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். 'பிரதமர் இ-பேருந்து' சேவைத் தொடக்கம், நலிவடைந்த பிரிவினருக்கான குடியிருப்புகள், காரைக்கால் NIT-ல் புதிய கட்டிடங்கள் மற்றும் ஜிப்மர் (JIPMER) புற்றுநோய் மைய நவீனமயமாக்கல். 750 ஏக்கர் பரப்பளவிலான காரசூர் - சேதாரபேட்டை தொழிற்பேட்டையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதன் பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மதுரையில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையிலான 4-வது ரயில் பாதை மற்றும் மேம்படுத்தப்பட்ட 8 ரயில் நிலையங்களைத் (பொள்ளாச்சி, மணப்பாறை உட்பட) திறந்து வைக்கிறார். மரக்காணம் - புதுச்சேரி மற்றும் பரமக்குடி - ராமநாதபுரம் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். கும்பகோணம், ஏற்காடு, வேலூர் ஆகிய நகரங்களில் புதிய ஆகாஷவாணி பண்பலை சேவைகள் தொடங்கப்படுகின்றன.

இந்த திட்டங்களைத் தொடங்கி வைத்த பின், மாலை 4 மணியளவில் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்று பிரதமர் சுவாமி தரிசனம் செய்கிறார். இதையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
