"இனி சொத்து வரி, குடிநீர் கட்டணங்களை வாட்ஸ்அப்பிலேயே செலுத்தலாம்" – சென்னை மாநகராட்சியில் டிஜிட்டல் வசதி அறிமுகம்!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்களைச் செலுத்துவதை மேலும் எளிமையாக்கும் வகையில், வாட்ஸ்அப் செயலி மூலமாகவே கட்டணங்களைச் செலுத்தும் புதிய டிஜிட்டல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்துப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன், ஐ.ஏ.எஸ். வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே இந்த அதிநவீன வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களின் கைபேசியில் 94450 61913 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணைச் சேமித்து, அதன் மூலம் சென்னை மாநகராட்சியின் பல்வேறு வரிச் சேவைகளைப் பெற முடியும். அரையாண்டுக்கு ஒருமுறை செலுத்த வேண்டிய சொத்து வரியை இந்த எண்ணிற்கு மெசேஜ் செய்வதன் மூலம் எளிதாகச் செலுத்த முடியும்.

சென்னை குடிநீர் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய குடிநீர்க் கட்டணம் மற்றும் கழிவுநீர் வரிகளை அலுவலகங்களுக்குச் செல்லாமல் ஆன்லைனிலேயே செலுத்தலாம். பொதுமக்கள் எந்த நேரத்திலும் (24/7) தங்களின் நிலுவைக் கட்டண விவரங்கள் மற்றும் வரி செலுத்தியதற்கான அதிகாரப்பூர்வ ரசீதுகளை வாட்ஸ்அப் மூலமாகவே உடனுக்குடன் பாதுகாப்பாகப் பெற்றுக் கொள்ளலாம்.
ஏற்கனவே சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் வசதிக்காகப் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல், வணிக உரிமம் புதுப்பித்தல், மற்றும் குறைகளைப் பதிவு செய்தல் உள்ளிட்ட 42 வகையான மாநகராட்சிச் சேவைகள் இந்த வாட்ஸ்அப் சாட்பாட் அமைப்பில் பயன்பாட்டில் உள்ளன.
தற்போது அதனுடன் சொத்து வரி மற்றும் குடிநீர்க் கட்டணம் செலுத்தும் இந்த புதிய டிஜிட்டல் கட்டண வசதியும் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளதால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்பதும் அலைச்சல்களும் முற்றிலுமாகத் தவிர்க்கப்படும். இந்த எளிய மற்றும் பாதுகாப்பான வசதியைப் பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்திப் பயனடையுமாறு மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
