SIR விவகாரப் போராட்டம்.. தவெக அரசின் கைது நடவடிக்கைக்கு வேல்முருகன் கடும் கண்டனம்!
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெற்ற ஜனநாயக முறைவிலான போராட்டத்தில் இளைஞர்களைக் கைது செய்த காவல்துறையின் நடவடிக்கைக்கும், அதற்கு அனுமதித்த தவெக அரசின் அணுகுமுறைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் (தவாக) தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, நேற்று சென்னை பெசன்ட் நகரில் மாணவர்களும் இளைஞர்களும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனநாயக வழியில் போராடிய அந்த இளைஞர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அதிரடியாகக் கைது செய்தனர். போராடும் இளைஞர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கத் தவறிய தவெக அரசின் இந்த அணுகுமுறை கடும் கண்டனத்திற்குரியது என்று வேல்முருகன் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
