தமிழகம் முழுவதும் 2வது நாளாக போராட்டம்... பத்திரப்பதிவுத் துறையின் புதிய 'இ-ஹப்' திட்டத்திற்குப் பத்திர எழுத்தர்கள் எதிர்ப்பு!

 
பத்திரப்பதிவு பதிவுத்துறை இ ஹப்

தமிழகப் பத்திரப்பதிவுத் துறையில் அமல்படுத்தப்படவுள்ள 'ஸ்டார் 3.0' மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், நவீன வசதிகளுடன் கூடிய 'இ-ஹப்' சேவை மையங்களை உருவாக்கும் அரசு நடவடிக்கைக்குப் பத்திர எழுத்தர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களுக்குச் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்ப்பதற்கும், முறைகேடுகளைத் தடுப்பதற்கும் அதிநவீன வசதிகளுடன் கூடிய 'இ-ஹப்' மையங்களை அமைக்கப் பத்திரப்பதிவுத் துறை திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே, ஒரு மாவட்டத்தில் உள்ள சொத்துகளை ஆன்லைன் வழியாகச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துப் பதிவு செய்துகொள்ளலாம். டிஜிட்டல் டோக்கன் மற்றும் அதிவேக வை-பை வசதியுடன் கூடிய இச் சேவைக்குச் சாதாரண முறையில் ரூ.2,000 கட்டணமும், தட்கல் முறையில் ரூ.5,000 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு

முதற்கட்டமாகச் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இத் திட்டத்தைச் செயல்படுத்தத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு டெண்டர் விட அரசு திட்டமிட்டுள்ளது. அரசு இத்திட்டத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கும் எனப் பத்திர எழுத்தர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இ-ஹப் மையங்களை நடத்தும் ஒப்பந்தத்தைப் பெறப் பெருந்தொகை தேவைப்படுவதால், கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே அதை ஏலம் எடுக்க முடியும். இதனால் பல தலைமுறைகளாக இத் தொழிலில் ஈடுபட்டுள்ள சாதாரணப் பத்திர எழுத்தர்கள், வழக்கறிஞர்கள், பத்திர விற்பனையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் என லட்சக்கணக்கானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.

பத்திரப் பணிகளைத் தனியாருக்கு மாற்றும்போது, பத்திரம் எழுதுவதற்குக் கட்டணங்கள் அதிகரித்துச் சாதாரணப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆன்லைன் பத்திரப்பதிவு

தனியாரிடம் பத்திரம் தயாரிக்கும் பணியை ஒப்படைக்கும் டெண்டரைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழ்நாடு பத்திர நகல் எழுத்தர் மாநிலச் சங்கத்தினர் நேற்று கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்று 2-வது நாளாகப் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு இத் திட்டத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்து டெண்டர் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் எனப் பத்திர எழுத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.