மெரினாவில் விஜய்க்கு ஆதரவாக போராட்டம்? குவியும் தவெகவினர் - போலீஸ் குவிப்பு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சியமைப்பதில் நீடிக்கும் இழுபறி தவெக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மெரினாவில் பிரம்மாண்ட போராட்டத்திற்குத் தொண்டர்கள் அழைப்பு விடுத்து வருவது பரபரப்பைக் கூட்டியுள்ளது.
"மக்களின் தீர்ப்பை மதித்து விஜய்யை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்" என்ற முழக்கத்துடன், ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போன்றதொரு தன்னெழுச்சியான போராட்டத்தை மெரினாவில் முன்னெடுக்கத் தவெகவினர் திட்டமிட்டு வருகின்றனர். #MarinaForVijay #SaveDemocracyTN போன்ற ஹேஷ்டேக்குகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் சென்னை நோக்கிப் புறப்படத் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொண்டர்களின் இந்தப் போராட்டத் திட்டத்தை முறியடிக்கத் தமிழகக் காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மெரினா கடற்கரை முழுவதும் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விவேகானந்தர் இல்லம் முதல் கலங்கரை விளக்கம் வரை முக்கிய இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரை மணற்பரப்பில் ஆட்கள் கூடுவதைத் தவிர்க்க ட்ரோன்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஒருபுறம் ஆளுநர் மாளிகையில் விஜய் காத்திருக்கும் சூழலில், மறுபுறம் மெரினாவில் தொண்டர்கள் கூட முயற்சிப்பது காவல்துறையினருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. மெரினாவுக்கு வரும் பொதுமக்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். தேவையற்ற கூட்டங்களைத் தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
