சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் சாலை மறியல்...250 பேர் அதிரடி கைது!

 
சாலை மறியல்

 

தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, சென்னை பாரிமுனையில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தற்காலிகமாகப் பணியாற்றி வருபவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களது வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்திப் கடந்த 4 நாட்களாக அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தூய்மை பணியாளர்கள் துப்புரவு

இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் திரண்டு திடீர் பேரணியாகச் சென்றனர். முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். பேரணியாகச் செல்ல முயன்றவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரமடைந்த பணியாளர்கள் அங்கேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியாளர்கள் துப்புரவு போராட்டம்

அப்போது தங்களது கோரிக்கை முழக்கங்களை எழுப்பியவாறு அவர்கள் சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களைப் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். பணி நிரந்தரம் என்ற கோரிக்கை முழுமையாக நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்