ஈரானில் 22 மாகாணங்களில் தீவிரமடைந்த மக்கள் போராட்டம் ... 10 பேர் பலி!
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் கடந்த சில நாள்களாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 22 மாகாணங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். போராட்டக்காரர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோம் நகரத்தில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட வன்முறையில் சாலைகள், தெருக்கள் தீக்கிரையாகிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அமைதியான போராட்டக்காரர்கள் மீது அரசு துப்பாக்கிச் சூடு நடத்தினால் அமெரிக்கா தலையிடும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஈரான் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கிடையே, பொருளாதார நெருக்கடி குறித்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், ஈரானின் பணமதிப்பு கடும் வீழ்ச்சியடைந்து, ஒரு அமெரிக்க டாலருக்கு சுமார் 14 லட்சம் ரியாலாக சரிந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. 2022ல் மஹ்சா அமினி மரணத்தைத் தொடர்ந்து எழுந்த பெரும் போராட்டத்தை அரசு கடுமையாக அடக்கியது நினைவுகூரத்தக்கது.
