இந்தியாவிற்குப் பெருமை.. பிரிட்டனின் ராயல் சொசைட்டி உறுப்பினரானார் விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் - 365 ஆண்டு வரலாற்றில் 2வது இந்தியப் பெண்!

 
பிரிட்டன் ராயல் சொசைடி உறுப்பினர் சௌமியா சுவாமிநாதன் பிரிட்டன் ராயல் சொசைடி உறுப்பினர் சௌமியா சுவாமிநாதன்

உலக அளவில் அறிவியல் துறையின் மிக உயரிய மற்றும் பழமையான அமைப்பான பிரிட்டனின் 'ராயல் சொசைட்டி' (Royal Society) அமைப்பில் புதிய உறுப்பினராக இந்திய விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பின் 365 ஆண்டுகால வரலாற்றில், இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டாவது பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

சென்னையில் பிறந்த சௌமியா சுவாமிநாதன், இந்தியாவின் 'பசுமைப் புரட்சியின் தந்தை' என்று போற்றப்படும் மறைந்த புகழ்பெற்ற விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் பிரபல இந்தியக் கல்வியாளர் மீனா சுவாமிநாதன் ஆகியோரின் மகள் ஆவார்.

மருத்துவ ஆராய்ச்சியாளரான சௌமியா சுவாமிநாதன், காசநோய் மற்றும் எச்.ஐ.வி குறித்த ஆராய்ச்சிகளில் சர்வதேச அளவில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். மேலும், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாகப் பணியாற்றி, உலகளாவிய மருத்துவத் துறையில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1660-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரிட்டனின் ராயல் சொசைட்டி, உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளைத் தங்களின் உறுப்பினர்களாகத் தேர்வு செய்து கௌரவித்து வருகிறது. ஐசக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஆவர்.

இந்த உயரிய அமைப்பில், இந்தியாவில் இருந்து முதன்முதலாகத் தேர்வு செய்யப்பட்ட பெண் விஞ்ஞானி ககன்தீப் காங் ஆவார். அவரைத் தொடர்ந்து, தற்போது சௌமியா சுவாமிநாதன் இந்த வரலாற்றுப் பட்டியலில் இணைந்து சாதனை படைத்துள்ளார். இவருக்குப் பல்வேறு உலக நாட்டுத் தலைவர்களும், அறிவியல் அறிஞர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.