38 பேரைக் கொன்று சாப்பிட்ட கொடூரன்... உகாண்டாவில் சைக்கோ கொலையாளி கைது!

 
உகாண்டா

உகாண்டா நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான தொடர் கொலையாளியாகக் கருதப்படும் முஜுரிசி மோசஸ் என்பவரை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் 38 பேரைக் கொன்று, அவர்களின் உடல்களை உண்டதாக இவர் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

2010 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் மசாகா, இபாண்டா மற்றும் காஸோ ஆகிய மாவட்டப் பகுதிகளில் மோசஸ் இந்தத் தொடர் கொலைகளைச் செய்து வந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

உகாண்டா

நள்ளிரவில் வீடுகளின் சுவர்களை உடைத்து அரிவாளால் குடும்பத்தினரைத் தாக்கிப் படுகொலை செய்வது, பெண்களைக் காதலிப்பதாக நம்ப வைத்து அழைத்துச் சென்று கொல்வது போன்ற கொடூரமான வழிகளில் இவர் செயல்பட்டுள்ளார். கொடூரமாகக் கொலை செய்தது மட்டுமன்றி, பலியானவர்களின் உடல்களைச் சாப்பிட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து உகாண்டா பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் முஹூசி கைனெருகாபா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

உகாண்டா பள்ளியில் கத்திக்குத்து

"நாட்டின் மிக மோசமான தொடர் கொலையாளியும் மனிதக் கறி சாப்பிடுபவனுமான முஜுரிசி மோசஸைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இவருக்குப் பகிரங்க விசாரணை நடத்தப்பட்டு, கண்டிப்பாக மரண தண்டனை பெற்றுத் தரப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நிலுவையில் உள்ள காணாமல் போனோர் வழக்குகள் மற்றும் இவருக்கு உதவிய கூட்டாளிகள் தொடர்பாகவும் அந்நாட்டுப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.