என்ஜினியரிங் படிப்புக்கான பொதுக் கலந்தாய்வு இன்று தொடக்கம் - 7.5% அரசுப் பள்ளி ஒதுக்கீட்டுக்கும் ஆன்லைனில் கலந்தாய்வு!

 
என்ஜினியரிங் பொறியியல்

தமிழகத்தில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான பொறியியல் (Engineering) படிப்புகளுக்கான பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று ஆன்லைன் வழியில் தொடங்குகிறது. இதனுடன் சேர்த்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வும் இன்றே தொடங்குகிறது. முன்னதாக, கடந்த ஜூலை 15 முதல் 18 வரை நடைபெற்ற விளையாட்டுப் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நிறைவடைந்தது.

இதில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 258 பேருக்கும், விளையாட்டுப் பிரிவில் 416 பேருக்கும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 139 பேருக்கும் என மொத்தம் 813 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பொறியியல் கல்லூரி

பொதுப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு மொத்தம் 3 சுற்றுகளாக ஆகஸ்ட் 31 வரை நடைபெறவுள்ளது: முதல் சுற்று பொது தரவரிசைப் பட்டியலில் 1 முதல் 37,976 வரை இடம் பெற்றுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். இரண்டாம் சுற்று தரவரிசைப் பட்டியலில் 37,977 முதல் 1,31,093 வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். மூன்றாம் சுற்று தரவரிசைப் பட்டியலில் 1,31,094 முதல் 2,33,812 வரை இடம் பெற்றுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம்.

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வும் இன்று தொடங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிகிறது. மூன்று சுற்றுகள் முடிவடைந்த பின்னரும் பொறியியல் இடங்கள் காலியாக இருக்கும் பட்சத்தில், துணைச் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.