தென்மாநில முதல்வர்கள் மாநாட்டைப் புறக்கணித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பின்னணி என்ன?

 
ரங்கசாமி

சென்னை அருகே கோவளம் மற்றும் மாமல்லபுரம் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி புறக்கணித்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசமாக இருப்பதால், இத்தகைய மாநில அளவிலான மற்றும் மண்டலக் கூட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைக் காட்டிலும் துணைநிலை ஆளுநருக்கே மத்திய அரசால் அதிக முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ரங்கசாமி

நிர்வாக ரீதியான அதிகாரம் மற்றும் அழைப்பு முன்னுரிமையில் நிலவும் இந்த வேறுபாடு காரணமாகத் தன் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், இம்மாநாட்டில் நேரில் பங்கேற்பதைத் தவிர்த்துப் புறக்கணிக்க முதல்வர் ரங்கசாமி முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுச்சேரி முதல்வர் பங்கேற்காத நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் இம்மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடு, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், தெலங்கானா துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்க்கா உள்ளிட்ட தென்மாநிலங்களின் முக்கியத் தலைவர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் பங்கேற்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.