புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் ராஜினாமா - படுதோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகல் - செல்வப்பெருந்தகைக்கு கலக்கம்?
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவைத் தந்துள்ள நிலையில், அதன் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் தனது பதவியைத் துறந்துள்ளார்.
புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் நேரடியாகப் போட்டியிட்டது. ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்புடன் களம் இறங்கிய அக்கட்சிக்கு, தேர்தல் முடிவுகள் பேரிடியாக அமைந்தன. போட்டியிட்ட 16 இடங்களில் வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த வரலாற்றுத் தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ள வைத்திலிங்கம், அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

புதுச்சேரியைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் வரக்கூடும் எனத் தகவல்கள் கசிகின்றன. செல்வப்பெருந்தகை மாற்றம்: தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக-விற்கு ஆதரவு அளித்தது உள்ளிட்ட பல்வேறு அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையையும் மாற்ற மேலிடம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் மற்றும் கூட்டணி மாற்றங்களால் ஏற்பட்டுள்ள சலசலப்புகளைச் சரிசெய்ய புதிய தலைமையைக் கொண்டு வர டெல்லி மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
வைத்திலிங்கத்தின் இந்தத் திடீர் ராஜினாமா புதுச்சேரி காங்கிரஸ் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தகட்டமாக மாநிலத் தலைவர் பொறுப்பை யார் ஏற்பார்? கட்சியை மீண்டும் எப்படி வலுப்படுத்துவது? என்பது குறித்து மேலிடப் பார்வையாளர்கள் விரைவில் புதுச்சேரி வரவுள்ளனர்.
