இன்று புதுவையில் விஜய் ரோடு ஷோ.. "டூ வீலரில் பின் தொடராதீங்க... கர்ப்பிணிகள், முதியோர் கூட்டத்துக்கு வராதீங்க" - புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரி மாநிலத்தில் நாளை தனது பிரம்மாண்ட சாலைப் பிரசாரத்தை மேற்கொள்கிறார். இதற்காகப் புதுச்சேரி காவல்துறையிடம் 4 முக்கிய இடங்களில் பரப்புரை செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கட்சித் தலைமை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தலைவர் விஜய் பயணம் செய்யும் வாகனத்தை, தொண்டர்கள் தங்களது இருசக்கர வாகனங்களிலோ அல்லது இதர வாகனங்களிலோ பின்தொடரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதோடு, விபத்துகளுக்கும் வழிவகுக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பரப்புரை நடைபெறும் இடங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறுவர்கள், பள்ளி மாணவ - மாணவியர், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், உடல்நலக்குறைவு உள்ளவர்கள் நேரில் வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பரப்புரை நடைபெறும் இடங்களில் குடிநீர் மற்றும் முதலுதவி சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய்யின் இந்தப் பயணம் புதுச்சேரி அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், புதுச்சேரி பரப்புரை அவரது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டமாகப் பார்க்கப்படுகிறது.
