ஹெல்மெட் அணியாதவர்களுக்கு நேரில் அட்வைஸ்… புதுச்சேரி சாலையில் வலம் வந்த பிரமாண்ட ரோபோ!

 
ரோபோ

புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, போக்குவரத்து போலீசார் வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இதில் பிரமாண்ட ரோபோ போன்ற உடையணிந்த நபர் சாலையில் தோன்றி வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்தார்.

புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் உள்ள முக்கிய சந்திப்பில் வியாழக்கிழமை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சாலை விபத்துகளைத் தடுப்பதற்கும், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிவதை ஊக்குவிப்பதற்கும் போலீசார் இந்த முயற்சியை மேற்கொண்டனர்.

போக்குவரத்து போலீசாருடன் இணைந்து செயல்பட்ட ரோபோ வேடமணிந்த நபர், ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி அறிவுரை வழங்கினார். அதேசமயம், ஹெல்மெட் அணிந்து வந்தவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார்.

சாலையில் திடீரென பிரமாண்ட ரோபோ தோன்றியதைப் பார்த்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஆச்சரியமடைந்தனர். பலர் இந்த நிகழ்வைத் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர். தற்போது இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.