5 வது முறையாக ரங்கசாமி புதுச்சேரி முதலமைச்சராக இன்று பதவியேற்றார்!

 
ரங்கசாமி ரங்கசாமி

புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று காலை 9.45 மணிக்கு ஐந்தாவது முறையாகப் பதவியேற்றார். கவர்னர் மாளிகையில் நடைபெற உள்ள இவ்விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன் அவருக்குப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ரங்கசாமி முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டு, ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பதவியேற்பு விழாவில், என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். முதலமைச்சருடன் அமைச்சர்களாக பா.ஜனதாவைச் சேர்ந்த நமச்சிவாயம் மற்றும் என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பதவியேற்க உள்ளனர். மற்ற அமைச்சர்களின் பதவியேற்பு குறித்த தகவல்கள் இன்னும் இறுதி செய்யப்படாததால், அமைச்சரவை விரிவாக்கம் குறித்த குழப்பம் தொடர்கிறது.

முதலமைச்சர் ரங்கசாமி நேற்று மாலை கவர்னர் கைலாஷ்நாதனைச் சந்தித்து, புதிய அமைச்சரவை பட்டியல் மற்றும் தனது முதல் கையெழுத்திட உள்ள திட்டங்கள் குறித்து ஆலோசித்தார். விழாவிற்காக கவர்னர் மாளிகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதில் ரங்கசாமியின் இந்த ஐந்தாவது பதவிக்காலம் முக்கியமானதாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கின்றனர்.