புதுச்சேரி: 5-வது முறையாக முதலமைச்சராகிறார் ரங்கசாமி!

 
ரங்கசாமி ரங்கசாமி

புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அதிமுக மற்றும் எல்.ஜே.கே தலா 1 இடத்திலும் என மொத்தம் 18 இடங்களைக் கைப்பற்றிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்தியா கூட்டணி 6 இடங்களை மட்டுமே பெற்றுப் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராக ஐந்தாவது முறையாகப் பொறுப்பேற்க உள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது இரண்டு முறையும், என்.ஆர்.காங்கிரஸ் தொடங்கிய பிறகு தற்போது மூன்றாவது முறையாகவும் அவர் முதலமைச்சர் அரியணையில் அமரப்போகிறார். மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட அவர் இரண்டிலும் வெற்றி பெற்றுத் தனது செல்வாக்கை மீண்டும் நிரூபித்துள்ளார்.

வழக்கமாக ரங்கசாமி எந்த ஒரு முக்கிய காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பும், தனது ஆன்மீக குருவான அப்பா பைத்தியசாமி கோவிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி, இன்றும் அவர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளார். விரைவில் நல்ல நாள் பார்த்து அவர் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் 2 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான நேயம் மக்கள் கழகம் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.