புதுக்கோட்டை கலெக்டர் ஆபீஸில் தவெக வேட்பாளர் அறைக்குள் அடைப்பு - அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

 
புதுக்கோட்டை தவெக வேட்பாளர் ஷெரீப்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த முதல்வர் விஜய்யை சந்திக்க முயன்ற தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், தவெக வேட்பாளருமான கே.எம்.ஷெரீப்பை அரசு அதிகாரிகள், போலீசார் சுமார் 3 மணி நேரம் அறைக்குள் பூட்டி சிறைவைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவிற்கு முதலமைச்சர் வருகை தந்திருந்தார். முதலமைச்சரை சந்தித்துப் புதுக்கோட்டை தொகுதி மக்களின் பிரச்சனைகளைத் தெரிவிப்பதற்காகவும், புத்தகம் ஒன்றை வழங்குவதற்காகவும் வி.ஐ.பி பாஸுடன் கே.எம்.ஷெரீப், காங்கிரஸ் வழக்கறிஞர் சந்திரசேகரன், யூசுப் ராஜா மற்றும் இப்ராஹிம் பாபு ஆகியோருடன் ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

பயனாளிகள் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு எனக் கூறிய அதிகாரிகள், அவர்களைப் பக்கத்து அறையில் அமருமாறு கூறியுள்ளனர். பின்னர் அந்த அறையின் வெளிக்கதவைப் பூட்டி வைத்ததாகக் கூறப்படுகிறது. காலை 9:45 மணி முதல் மதியம் 1:30 மணி வரை கிட்டத்தட்ட 3 மணி நேரம் தங்களை முதலமைச்சரைச் சந்திக்க விடாமல் ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்ததாக அவர் முகநூலில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த அறையில் குடிநீரோ அல்லது கழிவறை வசதியோ கூட இல்லை என்றும், முதலமைச்சர் புறப்பட்டுச் சென்ற பிறகே கதவு திறக்கப்பட்டதாகவும் வேட்பாளர் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.

"நாங்கள் ஒன்றும் கொள்ளையடிக்க செல்லவில்லை. முதலமைச்சரை சந்திக்க முடியாது எனத் தெளிவாகக் கூறியிருந்தால் திரும்பிச் சென்றிருப்போம். இந்த  செயலுக்குப் பொறுப்பான மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர் மற்றும் காவல் துறை அதிகாரி உரிய விளக்கம் அளிக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே வேட்பாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை அதிகாரிகள் அறைக்குள் பூட்டி வைத்த விவகாரம் புதுக்கோட்டை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.