பயங்கரம்... தனியார் பஸ் நிறுவன உரிமையாளர் அடித்துக் கொலை!

 
புதுக்கோட்டை

 

பொன்னமராவதி அருகே திருமண மண்டபம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தனியார் பஸ் நிறுவன உரிமையாளர் கட்டையால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற மகளும் படுகாயமடைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியைச் சேர்ந்தவர் சிதம்பரம் (80). இவர் சென்னையில் தனியார் பஸ் நிறுவனம் நடத்தி வந்தார். தற்போது சென்னையில் வசித்து வந்த இவர், உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இதையடுத்து தனது வீட்டில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். அப்போது மாலை 4 மணியளவில் வேந்தன்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் (55), விஜய் (35) ஆகிய இருவரும் சிதம்பரத்தின் வீட்டுக்கு வந்துள்ளனர்.

அங்கு திருமண மண்டபம் தொடர்பான பிரச்சினை குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

ஆம்புலன்ஸ்

கட்டையால் தாக்கி கொலை

இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன், விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து சிதம்பரத்தை கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிதம்பரத்தை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதற்கிடையே, தந்தையை தாக்குவதை தடுக்க முயன்ற அவரது மகள் இந்துமதியும் தாக்குதலில் படுகாயமடைந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

2 பேரிடம் போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சிதம்பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சீனிவாசன், விஜய் ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண மண்டபம் தொடர்பான தகராறில் தனியார் பஸ் நிறுவன உரிமையாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொன்னமராவதி பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.