பழனிக்குச் சென்ற அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து… 22 பயணிகள் படுகாயம்!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சாலையில், பட்டுக்கோட்டையில் இருந்து பழனிக்குச் சென்ற அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் அரசு பேருந்து பழனியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது புதுக்கோட்டை – விராலிமலை சாலையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 22 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப் பணியாளர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதற்கிடையே, விபத்து காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், பேருந்து எவ்வாறு கட்டுப்பாட்டை இழந்தது என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
