கோயில் திருவிழாவில் வழிபாடு செய்யத் தடை... ஒரே நேரத்தில் 41 பேர் மீது வழக்குப்பதிவு !

 
pudukottai

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே அமைந்துள்ள வளவம்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில் ஊர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்தத் திருவிழாவின் போது வழிபாட்டில் பங்கேற்க வந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்களைக் கோயிலுக்குள் செல்ல விடாமல் சிலர் தடுத்து நிறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழிபாட்டு உரிமையை மறுத்து தங்களைத் தடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதத்தையும் சமூகப் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல் துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கினர். வழிபாட்டிற்குத் தடை ஏற்படுத்தியதாக மாற்று சமூகத்தைச் சேர்ந்த 41 நபர்கள் மீது பட்டியல் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. குற்றச்சாட்டில் தொடர்புடைய நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான முதற்கட்டப் பணிகளைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக வளவம்பட்டி கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுப்பட்டு நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அமைதியை நிலவச் செய்யவும், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தவும் அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 41 பேர் மீது ஒரே நேரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் அந்த மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.