புனே கொடூரம்: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சோகம்! வருங்கால கணவரை 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டுக் கொன்ற பெண் - காதலனுடன் கைது!
மகாராட்டிர மாநிலம் புனேயில் ட்ரெக்கிங் சென்ற 26 வயது ரியல் எஸ்டேட் அதிபர், மலையிலிருந்து 400 அடி ஆழப் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் விபத்தாக விழவில்லை என்றும், அவரது வருங்கால மனைவியும் அவளது காதலனும் சேர்ந்து திட்டமிட்டு மலையிலிருந்து கீழே தள்ளிக் கொலை செய்ததும் அம்பலமாகியுள்ளது.
புனே மாவட்டம் ககுஞ்சே பகுதியைச் சேர்ந்தவர் கேதன் விஷால் அகர்வால் (26). இவர் தனது குடும்பத்திற்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்தார். இவருக்கும் சியா கோயல் என்ற பெண்ணுக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயமாகி, வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்தது.

சியா கோயலுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகப் புனே மாவட்டம் லோனாவாலா பகுதியில் உள்ள புகழ்பெற்ற 'லோகா காட்' கோட்டை மலைப்பகுதிக்கு வருமாறு கேதன் விஷாலுக்கு அவள் அழைப்பு விடுத்துள்ளார். வருங்கால மனைவியின் அழைப்பை ஏற்று, கடந்த ஜூன் 18 அன்று கேதன் விஷால் அங்கு சென்றுள்ளார். இருவரும் ஜோடியாக மலையேற்றம் செய்தபோது, அங்குக் கூடவே சியாவின் நண்பர் ஒருவரும் இணைந்து கொண்டுள்ளார். மலையின் செங்குத்தான பாறைப் பகுதியில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, கேதன் விஷால் திடீரென நிலைதடுமாறி 400 அடி ஆழப் பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆரம்பத்தில் இச்சம்பவத்தைக் கண்முன்னே நடந்த விபத்து என நம்பிய காவல் துறையினர், சாதாரணமாக விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஆனால், விசாரணையின் போது வருங்கால மனைவி சியா கோயல் அளித்த வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் போலீசாருக்குப் பலத்த சந்தேகம் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்திய போது, சியா கோயல் ரகசியமாகச் சேத்தன் சவுத்ரி (22) என்ற வாலிபரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் காதலன் சேத்தன் சவுத்ரியைக் காவல் துறையினர் தங்களது கஸ்டடியில் எடுத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது, கொலையின் முழு விவரமும் வெளிச்சத்திற்கு வந்தது.
தன் காதலுக்கு இடையூறாக இருக்கும் வருங்கால கணவர் கேதன் விஷாலைத் தீர்த்துக் கட்ட சியா கோயலும், அவளது காதலன் சேத்தனும் சேர்ந்து ஒரு சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படியே பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் அவரை மலைக்கு வரவழைத்து, புகைப்படம் எடுக்கும் சாக்கில் செங்குத்தான பாறையிலிருந்து இருவரும் சேர்ந்து கேதன் விஷாலைக் கீழே தள்ளிக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
இக்கொடூரச் சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்துள்ள புனே காவல் துறையினர், சியா கோயல் மற்றும் அவளது காதலன் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரையும் முறைப்படி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
