புனே பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி: மின்தடையால் 14 மணி நேரம் லிப்டுக்குள் சிக்கித் தவித்த மாணவி
மகாராஷ்டிரா மாநிலம் புனே லோனி கல்போர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழகத்தில், மின்தடை காரணமாக 19 வயது மாணவி ஒருவர் 14 மணி நேரம் லிப்டுக்குள் சிக்கித் தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்புகள் முடிந்ததும் தனியாக லிப்டில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட மின்தடையால், 5-வது மற்றும் 6-வது தளங்களுக்கு இடையே லிப்ட் நடுவழியில் நின்றுள்ளது.
அதிர்ச்சியடைந்த மாணவி கதவைத் தட்டியும், சத்தம் போட்டும் உதவி கேட்டுள்ளார். பெற்றோரைத் தொடர்பு கொண்டு பேசிய அடுத்த நொடியே இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், மாலை 5.30 மணியளவில் செல்போனும் அணைந்துள்ளது.
மகளைக் காணாமல் பதறிப்போன பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார், ஊழியர்கள் மற்றும் பாதுகாவலர்கள் விடிய விடியத் தேடியும் மாணவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் காலை 6 மணியளவில் மின்சாரம் சீராகி லிப்ட் இயங்கியபோதுதான், உள்ளே மயங்கிய நிலையில் கிடந்த மாணவி தெரியவந்துள்ளார்.

உணவு மற்றும் தண்ணீர் இன்றி 14 மணி நேரம் தவித்த மாணவி பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு குறித்துப் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
