மாசம் 2,00,000 குடும்பச் செலவுக்கு பத்தல... புலம்பும் இல்லத்தரசியின் மாதாந்திர பட்டியல்!
ஒவ்வொரு மாதமும் குடும்பச் செலவைச் சீராக நிர்வகிப்பது என்பது இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய சவாலான காரியமாக உள்ளது. குடும்பத்தின் வரவு மற்றும் செலவுத் திட்டத்தைத் திறம்படத் திட்டமிட்டு நடத்துவது அவர்களின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்றாகும். இந்த நிலையில் புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தனது குடும்பத்தின் மாதாந்திர செலவுக் கணக்கு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தாங்கள் பெரும்பாலும் வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடுவதாகவும், மின்சாரக் கார் பயன்படுத்துவதால் எரிபொருள் செலவு இல்லை என்றும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் தங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 2 லட்சத்து 24 ஆயிரத்து 300 ரூபாய் வரை செலவாவதாக அவர் புலம்பியுள்ளார். இதில் கட்டுமானத்தில் உள்ள வீட்டிற்கான தவணைத் தொகையாக 1.1 லட்சமும், தற்போதைய வீட்டு வாடகையாக 28,000 ரூபாயும் செலவாகிறது.

இவற்றுடன் மளிகைக்கு 20,000 ரூபாயும், குழந்தையின் பராமரிப்பு மையத்திற்கு 30,000 ரூபாயும், பொழுதுபோக்கிற்கு 15,000 ரூபாயும் செலவிடுவதாகப் பட்டியலிட்டுள்ளார். மேலும் மின்சாரக் கட்டணம் 6,000 ரூபாய், இணையம் 500 ரூபாய், ஆன்லைன் உணவு 3,000 ரூபாய், ஆடை கொள்முதல் 10,000 ரூபாய் மற்றும் வீட்டு உதவியாளருக்கு 1,800 ரூபாய் எனப் பணம் கரைவதாகக் கூறியுள்ளார். இந்த அதிகப்படியான செலவுகளில் எவற்றைக் குறைக்கலாம் என்று இணையவாசிகள் பலரும் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
