“தண்டனையா? வெகுமதியா?”.. திமுக முடிவிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு.. தமிழக அரசியலில் பரபரப்பு!

 
மனோ தங்கராஜ்

மத்திய அரசு கொண்டு வரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுகவின் இந்த முடிவிற்கு எதிராகத் திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் மூக வலைதளப் பக்கத்தில் விரிவான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொகுதி மறுவரையறை தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் தண்டனையா அல்லது வெகுமதியா என்றும், இது ‘ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான’ வெள்ளோட்டமா என்றும் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். வெறும் 50 சதவீதத் தொகுதி உயர்வு என்பது சமநீதிக்கான தீர்வல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொகுதி மறுவரையறை என்பது மக்கள்தொகை அடிப்படையிலான கணக்கீடாக மட்டும் இல்லாமல், கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள், நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் குரல் வலிமை, சிறுபான்மையினர் மற்றும் விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அணுகப்பட வேண்டிய பிரச்சினை என அவர் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவறை ஸ்டாலின் மறுவரை எஸ்.ஐ.ஆர். SIR

1971-ல் தமிழ்நாட்டின் மக்கள்தொகை 4.1 கோடியாகவும், உத்தரப் பிரதேசத்தின் மக்கள்தொகை 8.3 கோடியாகவும் இருந்த நிலையில், 2026-ல் தமிழ்நாட்டின் மக்கள்தொகை இரு மடங்காகவும் (8 கோடி), உ.பி.யின் மக்கள்தொகை மூன்று மடங்காகவும் (24 கோடி) உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்திய மாநிலங்களுக்கும் செயல்படுத்தாத மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான உயர்வு என்பது தென் மாநிலங்களை வஞ்சிக்கும் செயல் என அவர் விமர்சித்துள்ளார்.

முன்மொழியப்படும் 50 சதவீத உயர்வின்படி உத்தரப் பிரதேசத்தின் இடங்கள் 120 ஆகவும், தமிழ்நாட்டின் இடங்கள் 58 ஆகவும் உயரும்போது, இரு மாநிலங்களுக்கும் இடையிலான வித்தியாசம் 41-லிருந்து 62 ஆக அதிகரிக்கும் என்றும், அதேபோல் தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து 195 இடங்கள் கிடைக்கும்போது, உ.பி. மற்றும் பீகார் ஆகிய இரு மாநிலங்களுக்கு மட்டுமே 180 இடங்கள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் மற்றும் எல்லை மாற்றம்: தொகுதி மறுவரையறையில் எல்லைகளை மாற்றி அமைக்கும்போது (Gerrymandering), பாஜகவுக்குச் சாதகமான தொகுதிகளை அதிகரிப்பதோடு சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்றும், அரசமைப்புச் சட்டத்திலிருந்து மக்கள்தொகை என்ற வாசகத்தை நீக்கித் திருத்தம் செய்வது ஏற்புடையதல்ல என்றும் அவர் சாடியுள்ளார்.

மனோ தங்கராஜ்

850 எம்.பி.க்கள் கொண்ட அவையில் விவாதங்களுக்கான நேரம் மேலும் குறைந்து, நாடாளுமன்றம் விவாத மன்றமாக இல்லாமல் மாநாட்டுக் கூட்டமாக மாறும் அபாயம் உள்ளதாகவும், ஒரு எம்.பி.யைத் தேர்ந்தெடுக்கவும் நாடாளுமன்றத்தை நடத்தவும் ஆகும் செலவினங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாடு அரசு 2025-ஆம் ஆண்டில் மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைத்த குழு, மக்கள்தொகைப் பெருக்கத்தைச் சீராக்கும் நோக்கில் 2126-ஆம் ஆண்டு வரை தொகுதி மறுவரையறையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையை 550 ஆக மட்டுப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளதாக மனோ தங்கராஜ் நினைவூட்டியுள்ளார். அனைத்து மக்களுக்கும் நியாயமான முடிவை எட்ட குரியன் ஜோசப் குழுவின் பரிந்துரையை ஏற்பதே ஒரே வழி என அவர் வலியுறுத்தியுள்ளார்.