பஞ்சாப் சட்டசபை தேர்தல்... அனைத்து 117 தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டி!

 
பஞ்சாப் பாஜக சந்தோஷ்

வரவிருக்கும் 2027-ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) மாநிலத்தில் உள்ள அனைத்து 117 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் 2 நாள் பயணமாக பஞ்சாப் சென்றுள்ளார். மொகாலி விமான நிலையத்தில் அவருக்குப் பஞ்சாப் மாநிலக் தலைவர் சர்தார் கேவல் சிங் தில்லான் மற்றும் இணைப் பொறுப்பாளர் சர்தார் நரேந்திர சிங் ரெய்னா ஆகியோர் நேரில் வரவேற்பு அளித்தனர்.

பாட்டியாலா நகரில் நடைபெற்ற முதல் மண்டல அளவிலான கூட்டத்தில் உரையாற்றிய சந்தோஷ், "பஞ்சாப் மாநிலம் மாற்றத்திற்குத் தயாராகிவிட்டது. அந்த மாற்றத்தை மெய்ப்பிக்கும் வகையில் பா.ஜ.க முழுவீச்சில் தயாராகி வருகிறது" எனக் குறிப்பிட்டார்.

4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

ஷிரோமணி அகாலி தளக் கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமையலாம் எனப் பல்வேறு யூகங்கள் பரவி வந்த நிலையில், பா.ஜ.க 117 இடங்களிலும் தனித்துப் போட்டியிடும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து லூதியானா, ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில் பா.ஜ.க-வின் மண்டல ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள், தேர்தல் அட்டவணைகள் மற்றும் வாக்காளர் வழிகாட்டல்களைப் பெற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.