ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார்... போலீஸ் நிலையத்திலேயே இளைஞர் தற்கொலை முயற்சி!

 
punjab

பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில், கார் தீ விபத்து தொடர்பான சான்றிதழ் பெற போலீசார் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறி விரக்தியடைந்த இளைஞர், போலீஸ் நிலையத்திலேயே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பர்னாலா மாவட்டம் டொனாலோ பகுதியை சேர்ந்த ஜபன்பிரீத் சிங் என்பவரின் கார் கடந்த 11-ம் தேதி தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து அவர் காப்பீட்டு நிறுவனத்தை அணுகியுள்ளார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

கார் தீ விபத்துக்கான காப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள, போலீசாரிடம் இருந்து விபத்து தொடர்பான சான்றிதழை பெற்று வருமாறு காப்பீட்டு நிறுவனம் அவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து சான்றிதழ் பெற ஜபன்பிரீத் சிங் போலீஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக அவர் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால் விரக்தியடைந்த ஜபன்பிரீத் சிங், போலீஸ் நிலையத்திலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் புகார் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.