மகளை இழந்த துயரத்திலும் தந்தை நெகிழ்ச்சி ... 2 பேருக்கு மறுவாழ்வு அளித்த 20 வயது இளம்பெண்!
பஞ்சாபில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 20 வயது இளம்பெண்ணின் சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. மகளை இழந்த துயரத்திலும் அவரது தந்தை எடுத்த முடிவால், இரண்டு நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
வெளிநாடு செல்லக் கனவு கண்ட இளம்பெண்
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம் முலோவால் கிராமத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண், பிளஸ் 2 படிப்பை முடித்திருந்தார். வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற கனவுடன் IELTS தேர்விலும் தேர்ச்சி பெற்றிருந்தார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தார்.
தொடக்கத்தில் தூரி மற்றும் லூதியானாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற அவர், மேல் சிகிச்சைக்காக அக்டோபர் 16-ஆம் தேதி சண்டிகரில் உள்ள PGIMER மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அக்டோபர் 21-ஆம் தேதி மூளைத்தண்டு செயலிழப்பால் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இரு நோயாளிகளுக்கு கிடைத்த மறுவாழ்வு
மகள் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை முடிவுக்கு வந்த நிலையில், அவரது சிறுநீரகங்களைத் தானமாக வழங்க தந்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, 38 மற்றும் 32 வயதுடைய இரு ஆண் நோயாளிகளுக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டன.
மகளின் இழப்பால் துயரத்தில் இருந்தபோதும், அவரது உறுப்புகள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று தந்தை எடுத்த முடிவு, உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.
