ஒரே கிராமத்தில் சில மணி நேர இடைவெளியில் 3 குழந்தைகள் வாயில் நுரை தள்ளி உயிரிழப்பு!
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மோஹ்ரேவாலா கிராமத்தில், சில மணி நேர இடைவெளியில் மூன்று பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளும், மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு மாதக் குழந்தையும் அடங்குவர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குஷ்னசீப் கவுர் (7), அவரது தந்தையின் மற்றொரு மனைவிக்குப் பிறந்த குர்வீர் கவுர் (11 மாதங்கள்) ஆகிய இருவருக்கும் வெள்ளிக்கிழமை இரவு கடையில் வாங்கிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை அதிகாலை இருவருக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதே கிராமத்தைச் சேர்ந்த மன்ப்ரீத் கவுர் (6 மாதங்கள்) என்ற குழந்தையும் தாய்ப்பால் குடித்த சிறிது நேரத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு குடிநீர், பால் மற்றும் உணவுப் பொருட்களின் மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மூன்று குழந்தைகளின் உயிரிழப்புக்கும் ஒரே காரணமா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உடற்கூறாய்வு மற்றும் ஆய்வகப் பரிசோதனை முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
