அம்பேத்கர் சிலையைச் சுற்றிய கண்ணாடி மீண்டும் உடைப்பு! பஞ்சாப்பில் பெண் கைது
பஞ்சாப் மாநிலத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புக் கண்ணாடி கூண்டு மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 45 வயது பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
லூதியானா மாவட்டத்தில் ஜலந்தர் பைபாஸ் சவுக் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை அந்தச் சிலையைச் சுற்றியுள்ள பாதுகாப்புக் கண்ணாடி மீது பெண் ஒருவர் கல்லை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் கண்ணாடியின் ஒரு பகுதி உடைந்தது.
அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், கல் வீசிய பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதே இடத்தில் கடந்த ஜூலை 14-ம் தேதி பாதுகாப்புக் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் மாதத்திலும் அம்பேத்கர் சிலைக்கு அவமரியாதை செய்யப்பட்டதாகப் புகார் எழுந்து போராட்டங்கள் நடைபெற்றன.தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சிலைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
