பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களைக் கசியவிட்ட பஞ்சாப் இளம்பெண் கைது - 2 வீரர்களிடம் தீவிர விசாரணை!
இந்திய ராணுவத்தின் மிக முக்கிய ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ க்குத் தொடர்ந்து வழங்கி வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பரிட்கோட் பகுதியைச் சேர்ந்த சிந்து என்ற இளம்பெண், இந்திய ராணுவத்தின் நிலைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ரகசியத் தகவல்களைத் திரட்டிப் பாகிஸ்தான் உளவு அமைப்புக்குத் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.
விசாரணையில், இந்திய ராணுவத்தில் பணிபுரியும் இரண்டு வீரர்களுடன் அவர் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த வீரர்களிடமிருந்து இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதிகள் தொடர்பான முக்கியமான உளவுத் தகவல்களைப் பெற்று அவர் பாகிஸ்தானுக்குக் கைமாற்றியுள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பஞ்சாப் காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டுச் சிந்துவைக் கைது செய்தனர். மேலும், அவருக்கு ரகசியத் தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் அந்த 2 ராணுவ வீரர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் யாருக்கெல்லாம் தகவல் அளித்துள்ளனர் என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
