புரட்சி பாரதம் ஜெகன்மூர்த்தி 'இரட்டை இலை' சின்னத்தில் போட்டி!

 
புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தி புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தி

தொகுதிப் பங்கீட்டில் நிலவி வந்த இழுபறிக்குப் பின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன்மூர்த்தி, தங்கள் கட்சி மீண்டும் அதிமுக கூட்டணியிலேயே தொடர்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் அக்கட்சி அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னத்திலேயே போட்டியிடும். வேலூர் மாவட்டத்திலுள்ள கே.வி.குப்பம் (தனி) தொகுதியில் ஜெகன்மூர்த்தி மீண்டும் போட்டியிடுகிறார். முன்னதாக 2 தொகுதிகள் கேட்ட நிலையில், ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்த ஜெகன்மூர்த்தி, நேற்று (மார்ச் 27) இபிஎஸ் உடனான சந்திப்பிற்குப் பிறகு சமாதானமடைந்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக கூட்டணியில் எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கே.வி.குப்பம் தொகுதியில் நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன். அதிமுகவின் வெற்றிக்காக எங்களது கட்சித் தொண்டர்கள் முழுமையாகப் பணியாற்றுவார்கள்" என்று தெரிவித்தார்.

ஏற்கனவே 2021 தேர்தலிலும் ஜெகன்மூர்த்தி இதே கே.வி.குப்பம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் அதே சின்னத்தில் போட்டியிடுவது தொகுதிக்குள் அவருக்குள்ள செல்வாக்கை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.