புரட்டாசி, தசரா விரதம்... மீன் விலை குறைவு - சீலா கிலோ ரூ.1,000-க்கு விற்பனை!

 
மீன்

தூத்துக்குடி கடல் பகுதியில் வீசிவரும் பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக மீன்களின் வரத்து கடுமையாகக் குறைந்துள்ளது. இதனால் திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியதால் பெரும்பாலான நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் குறைந்த அளவிலான படகுகளே கரை திரும்பியதால் மீன் ஏலக் கூடத்திற்கு வரத்து குறைந்தது.

மீன் கடை மார்க்கெட் அசைவம்

சந்தையில் வரத்து குறைந்ததன் காரணமாக, சீலா மீன் கிலோ 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், விளை மீன் கிலோ ரூ.600 வரையும், பாறை மீன் கிலோ ரூ.450 வரையும், ஊழி மீன் கிலோ ரூ.350 முதல் ரூ.450 வரையும், நண்டு கிலோ ரூ.700 வரையும், சூறை மீன் கிலோ ரூ.200 வரையும் விற்பனையாகின.

புரட்டாசி மாதம் மற்றும் தசரா விரதம் காரணமாகச் சந்தையில் பொதுமக்களின் கூட்டம் சற்றுக் குறைவாகவே காணப்பட்டது. இருப்பினும், சாளை மீன் வரத்து முற்றிலுமாக இல்லாததால் ஒரு கூடை ரூ.3,000 வரை விற்பனையானது. வரத்து குறைந்த போதிலும் நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.